உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்திருந்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜனவரி 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களில் பா.ஜ.க சார்பில் தூய்மை பிரச்சாரம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், டெல்லி, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோவிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று (16-01-24) தூய்மைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன் பின்னர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதன் மூலம் 500 ஆண்டுகால உறுதிமொழி மற்றும் காத்திருப்பு ஆகிய இரண்டும் நிறைவேறியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு நிகராக ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழா இருக்கப் போகிறது. பிரதமர் மோடி அழைப்பின் பேரில், கோவில் வளாகத் தூய்மை பிரச்சாரத்திற்கு டெல்லி மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏனென்றால் இதைவிட புனிதமும், பக்தியும் வேறு எதுவும் இருக்காது.
கோவில்களில் நடக்கும் பிரார்த்தனைகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஊழலற்ற ஆட்சி அளிப்பதாக உறுதியளித்த ஆம் ஆத்மி தலைவர்கள், அதற்கு பதிலாக ஊழல் நிறைந்த ஆட்சியைக் கொடுத்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராமர் கோவில் விவகாரத்தை மக்களிடையே தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை என்று காங்கிரஸ் முதலில் கூறியது. அதன் பின்னர், அவர்கள் அழைக்கப்பட்ட போது, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு வெவ்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்” என்று கூறினார்.