நாடாளுமன்ற மக்களவையில் ஆளும் பாஜகவிற்கு 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தாலும், மாநிலங்களவையை பொறுத்த வரையில் அங்கு மெஜாரிட்டி பலம் இல்லாமலேயே தொடர்ந்து பல ஆண்டுகளாக பாஜக இருந்து வருகிறது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் பெரும்பாலான மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறினாலும், போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக முத்தலாக் போன்ற பல்வேறு மசோதாக்கள் கிடப்பில் கிடக்கிறது. ஏனெனில் நிதி மசோதாக்களை தவிர மீதமுள்ள அனைத்து மசோதாக்களுக்கும் மாநிலங்களவையின் ஒப்புதல் அவசியமாகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட ஆர்டிஐ திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கு போதிய பெரும்பான்மை எண்ணிக்கையை பெற மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த முயற்சியின் ஒரு கட்டமாக ஆர்டிஜ திருத்த மசோதாவை தீவிரமாக எதிர்த்த தெலுங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கேசிஆரை தொடர்புகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, மசோதாவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அமித்ஷாவின் கோரிக்கையை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், இன்று பேசிய அக்கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பியுமான ஆச்சாரியா, எங்கள் கவலைகளை மத்திய அரசிடம் தெரிவிப்போம். அவர்கள் அதை புரிந்துகொண்டார்கள் என்றால் நாங்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளார். ஒரு போன் கால் மூலம் ஆதரவு திரட்டிய அமித்ஷாவின் ராஜ தந்திரத்தால் பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.