Skip to main content

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதிகோரும் வழக்கு - அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றம்!

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதிகோரும் வழக்கு - அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றம்!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் தரிசனம் செய்ய பெண்களுக்கு நீண்டகாலமாகவே அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். ஆனால், இந்தக் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுவதில்லை. பெண்களின் மத வழிபாட்டு சுதந்திரமும், அவர்கள் எங்கு வழிபடவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரமும் சபரிமலைக்கோவிலில் மறுக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, அசோக் பூஷன், பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இனி இதுதொடர்பான வழக்கு விசாரணையை அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டனர். மேலும், அந்த அமர்வு கவனத்தில் கொள்ளவேண்டிய சில கருத்துக்களையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

அதன்படி, பெண்களுக்கான சமத்துவ உரிமைகளும், மத வழிபாட்டுச் சுதந்திரமும் பாகுபாடுகளைச் சந்திக்கின்றனவா? அதேபோல், அரசமைப்புச் சட்டம் 25ன் படி மத வழிபாட்டுச் சுதந்திரத்தைப் பாதிக்கிறதா? என்பதை ஆராயவேண்டும்.  மேலும், கேரள இந்து பொதுவழிபாட்டுத் தளங்களுக்கான சட்டம் 1965, பிரிவு 3(பி)யின் படி, பெண்கள் குறிப்பிட்ட சமயங்களில் பொதுவழிபாட்டுத் தளங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற சட்டத்தாலும் பெண்களின் வழிபாட்டு சுதந்திரம் பாதிக்கப்படுகிறதா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அமர்வு விசாரணை முடிவுகளை, இந்தத்தடை உத்தரவை 1991ஆம் ஆண்டு பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த விசாரணை நடந்துமுடிந்து அரசியலமைப்பு அமர்வு அளிக்கும் பதில்களைப் பொருத்தே அடுத்தகட்ட தகவல்கள் தெரியவரும். சபரிமலைக் கோவில் கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்