Skip to main content

மின்வேலியில் சிக்கிய உயிரிழந்த இளைஞர்கள்; விவசாயிகள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 03/11/2024 | Edited on 03/11/2024
Action taken by police on farmers on Youth trapped in electric fence

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள அரியாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசைத்தம்பி. இவரது மகன் ராஜேஷ் (18), மற்றும் முருகானந்தம் (26) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை வரை இவர்கள் வீடடு திரும்பாததால் உறவினர்கள் காட்டுப் பகுதியில் தேடியுள்ளனர். அதே நேரத்தில் கோமாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தைலமரக் காட்டுக்குள் இரு இளைஞர்கள் சடலமாக கிடப்பதாக தகவல் வர அங்கு சென்று பார்த்த உறவினர்கள் கதறி அழுததுடன் கந்தர்வக்கோட்டை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் சடலங்களை கைப்பற்றி தடயங்களை சேகரித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தடயங்கள் காணப்பட்டது. ஆனால், இளைஞர்களின் உறவினர்கள், மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது சடலங்களை காட்டுப் பகுதியில் தூக்கி வந்து போட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். இதனையடுத்து போலீசார் விசாரனை செய்த போது, கோமாபுரம் கிராமம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சின்னையன் மகன்கள் கனகராஜ் (50), நாகராஜ் (45) ஆகியோரின் சோளத் தோட்டத்தில் பன்றிகள் நாசம் செய்துவிடுவதால் அங்கு மின்வேலி அமைத்துள்ளனர். இதனை பாதுகாக்க திருப்பதி என்பவர் காவல் பணியில் இருந்துள்ளார். 

சம்பவம் நடந்த அந்த வேளையில், மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், திருப்பதி அங்குள்ள கொட்டகையில் இருந்துள்ளார். இந்த நிலையில், அங்கு வந்த ராஜேஷும், முருகானந்தம் மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அனுமதி இல்லாத மின்வேலி என்பதால் தங்கள் மீது நடவடிக்கை வரும் என்பதால் சடலங்களையும், அவர்கள் வந்த பைக்கையும் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து விவசாயிகளான கனகராஜ், நாகராஜ், தோட்டக் காவலாளி திருப்பதி ஆகியோரை கந்தர்வக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்