தேசிய அளவில் லோக்பால் அமைப்பையும், மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காந்தியவாதியான அண்ணா ஹசாரே இன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் இந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதுபோல மத்திய அரசும் லோக்பால் அமைப்புக்கான நீதிபதியை இன்னும் அறிவிக்கவில்லை. இவை அனைத்தையும் கண்டித்து அண்ணா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த உண்ணாவிரதமானது அண்ணா ஹசாரேவின் சொந்த கிராமமான ரலேகான்சித்தியில் உள்ள யாதவ்பாபா கோயிலில் நடைபெற்று வருகிறது. அவரது இந்த போராட்டத்திற்கு அங்குள்ள மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு தந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். இவரது இந்த உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தி அம்மாநில அரசு சார்பில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.