ஸ்வீடன் தொலைத்தொடர் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்ஸன் நிறுவனத்துடன் இந்திய நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 2014-ம் ஆண்டு நாடு முழுக்க ரிலையன்ஸ் அலைவரிசை மற்றும் அதன் பராமரிப்பு ஆகியவற்றிற்காக ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 1,500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என்று எரிக்ஸன் நிறுவனம், தேசிய நிறுவனச் சட்டம் மூலம் வழக்கு தொடர்ந்தது. அப்போது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 500 கோடி கொடுத்தால்போதும் எனத் தெரிவித்திருந்து.
அந்த வழக்கில் 2018-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் எரிக்ஸன் நிறுனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்நிறுவனம் அந்த தொகையை உரிய நேரத்தில் செலுத்தவில்லை. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் திவாலானது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனில் அம்பானி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் 500 கோடி ரூபாயில் நிலுவை தொகையான 453 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிருவனத்திற்கு தரவில்லை என்றால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூன்று மாதங்கள் சிறை செல்ல நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து உடனடியாக ரூ. 260 கோடியை திரட்ட அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களிடம் அந்நிறுவனம் ஒப்புதலை கோரியது.
கடன் வழங்கியவர்களிடம் இருந்து 260 கோடியை திரட்டினாலும் இன்னமும் 200 கோடி ரூபாயை அனில் அம்பானி செலுத்த வேண்டி நிலையில் இருந்தார். அதனால் தனது சகோதரரின் ஜியோ நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ததற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு கேட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முகேஷ் அம்பானி அந்த தொகையை நேற்று அனில் அம்பானிக்கு கொடுத்திருக்கிறார் அதன் மூலம் எரிக்ஸன் நிறுவனத்திற்கு வழங்கவேண்டிய நிலுவை தொகையை அனில் அம்பானி செலுத்தியுள்ளார். எரிக்ஸன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த நீதிமன்றம் கொடுத்த நான்கு வார அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்த தொகையை முகேஷ் அம்பானியிடம் அனில் அம்பானி கேட்டது கடந்த மாதம் 23-ம் தேதி. எரிக்ஸன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த நீதிமன்றம் கெடுவித்த தேதி மார்ச் 19. இந்த நிலையில் முகேஷ் அம்பானி நேற்று இந்த தொகையை செலுத்தியுள்ளார். இதன் மூலம் அனில் அம்பானி எரிக்ஸன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை திருப்பி செலுத்தியுள்ளார்.
முகேஷ் அம்பானிக்கு நன்றி தெரிவித்த அனில் அம்பானி “இந்த நெருக்கடியான நேரத்தில் என்னுடன் துணை நின்றதற்காக என்னுடைய மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி மற்றும் நிடா அம்பானிக்கு என்னுடைய உண்மையான மற்றும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் ஆதரவு அளித்ததன் மூலம் உறுதியான குடும்ப மதிப்புகளுடன் நாம் இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்துள்ளார். அவர்களுடைய இந்தச் செயலால் நான் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் நன்றியுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.