மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாகக் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்குச் சென்றார். அந்த சமயம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டின் முன் குக்கி இன மக்களைக் காப்பாற்றக் கோரி குக்கி இனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு அங்கு அமைதி நிலைமை திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரக்காரர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து இருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. கலவரம் குறித்து தெரிவித்திருந்த இம்பால் கிழக்கு போலீஸ் எஸ்.பி. ஷிவ் காந்தா சிங், “இம்பால் கிழக்கில் உள்ள காமன்லோக் பகுதியில் இன்று (14ம் தேதி) காலை ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கலவரத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்வதற்கான செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாகச் சென்றும் இன்னும் அந்த மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்குள் வராத நிலையில், நேற்று நள்ளிரவு மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. இதில், பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம், இம்பாலில் உள்ள மத்திய இணை அமைச்சர் ரஞ்சன் சிங் வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஏ.என்.ஐ.யிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ரஞ்சன் சிங், “நான் அரசு சம்பந்தமான வேலையாக கேரளாவில் உள்ளேன். இந்த விபத்தில் என் வீட்டு நபர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. என் வீட்டின் முதல் தளம் மற்றும் தரை தளத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. என் சொந்த மாநிலத்தில் நடக்கும் இந்த வன்முறை சம்பவங்கள் எனக்கு வருத்தத்தை தருகிறது. அமைதியை மீட்க முயற்சி செய்து வருகிறேன். இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், "பாஜகவின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை 40 நாட்களுக்கும் மேலாக எரித்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது. பிரதமர் மோடி இந்தியாவை தோல்வி அடையச் செய்துவிட்டு முற்றிலும் அமைதியாக இருக்கிறார். இந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூர் மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும். மணிப்பூரில் உள்ளவர்கள் ஒவ்வொருவர் இதயத்தையும் அன்பால் திறப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.