தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.
இதனிடையே "இங்கிலாந்தில் கரோனா பரவும் அளவைப் பார்க்கையில், இந்தியாவிலும் அதேபோன்ற பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பாதிப்புகள் பதிவாகும்" என சில தினங்களுக்கு முன்னர் நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியா, ஒமிக்ரான் பரவலை நிபுணர்களைக்கொண்டு கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நமது சுகாதாரப் பணியாளர்களின் முயற்சியால் இதுவரை 88 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 58% பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று அனைத்து மாநிலங்களிலும்,யூனியன் பிரதேசங்களிலும் போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளன. அவற்றில் 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் அவர்களிடம் உள்ளன. நமது தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. இன்று இந்தியா ஒரு மாதத்திற்கு 31 கோடி டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது. அடுத்த 2 மாதங்களில் இது மாதத்திற்கு 45 கோடி என்ற அளவிற்கு உயரும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது விரைவில் தொடங்கும்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 161 ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாங்கள் தினமும் நிபுணர்களைக் கொண்டு நிலைமையை கண்காணித்து வருகிறோம். முதலாவது மற்றும் இரண்டாவது கரோனா அலைகளில் நாம் பெற்ற அனுபவத்தின் மூலம், திரிபுகள் பரவும்போது பிரச்சனைகளை சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, முக்கியமான மருந்துகளின் கூடுதல் இருப்பை உறுதி செய்துள்ளோம். இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெறிவித்துள்ளார்.