கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானம் குறித்து பேசிய முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் குறித்து காரசாரமாக பேசினர். இதனால் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கர்நாடக சட்டப்பேரவையில் ஏற்பட்ட தொடர் அமளி காரணமாக, அவையை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை பாஜக எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து பேசினர். அதில் கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை பாஜக எம்.எல்.ஏக்கள் கேட்டுக்கொண்டனர். இதன் காரணமாக கர்நாடகா அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரை பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்தால், சபாநாயகர் அரசு தலைமை வழக்கறிஞருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.