இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1%- க்கும் கீழாகவே ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "நடப்பு நிதியாண்டில் முதல் 10 மாதங்களில் 4 லட்சத்து 19 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியிருக்கிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1%- க்கும் கீழாகவே ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. இது ஒட்டுமொத்த இறக்குமதியில் 0.2% மட்டுமே ஆகும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை தற்போது கூடுதலாக வாங்கினாலும், அது ஒட்டுமொத்த இறக்குமதியில் மிக மிக குறைந்த அளவாகவே இருக்கும். எனினும், அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது". இவ்வாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தெரிவித்தார்.