மத்திய உள்துறை அமித்ஷா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், மகாராஷ்ட்ர ஆளுநர் அம்மாநில முதல்வருக்கு எழுதிய கடிதம் குறித்தான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் ஒன்றுகூடுதலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஊரடங்கின் போது நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இதனையடுத்து, தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மஹாராஷ்ட்ர மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அம்மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்தச் சூழலில், மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து பாஜகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாநில அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோயில் திறப்பதில் ஏன் தாமதம் எனக் கேட்டு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதினார். அதில், ‘‘நீங்கள் திடீரென மதச் சார்பற்றவாதியாக மாறிவிட்டீர்களா? பார்கள் மற்றும் உணவகங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் போது, எங்கள் கடவுள்கள் மட்டும் பூட்டப்படுவது கண்டனத்திற்குரியது. வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவதைத் தள்ளிவைக்க ஏதேனும் தெய்வத்தின் முன்னறிவிப்பை நீங்கள் பெறுகிறீர்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்த கடிதம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அமித்ஷா கூறுகையில், "மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அனுப்பிய கடிதத்தைப் பார்த்தேன். ஆளுநர் சாதாரணமாகத்தான் தனது கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். எனினும் அக்கடிதத்தில் சில வார்த்தைகளை அவர் தவிர்த்திருக்கலாம். மேலும், வார்த்தைகளை அவர் கவனமாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.