கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்திருந்தது. மேலும் அவர்களை 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலாக அவர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது.
மேலும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அதேசமயம், இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த வழக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மே 9 ஆம் தேதி வரை கர்நாடக அரசின் இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக் கூடாது. மேலும் மே 9 ஆம் தேதி வரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், சிக்கொடி பகுதியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், “பாஜக 4% முஸ்லீம் இட ஒதுக்கீட்டை நீக்கியது மற்றும் லிங்காயத்துகள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டை அதிகரித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறுகிறது. இது லிங்காயத்துகள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டை குறைக்கும். கர்நாடகா இதை விரும்பவில்லை. மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு நேற்று (09.05.2023) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் கர்நாடக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பேசியது உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பது போன்று உள்ளது" என வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அது குறித்து யார் பேசினாலும் கருத்து தெரிவித்தாலும் தவறுதான். மேலும் நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், "ஒரு விவகாரம் நீதித்துறையின் முன்பாக நிலுவையில் இருக்கும் போது அரசியல் கட்சியினர் எப்படி இது குறித்து கருத்து கூறமுடியும். இந்த விவகாரத்தில் அரசியல் கலக்கப்படுவதை நீதிமன்றம் விரும்பவில்லை. இதுபோன்ற பகிரங்க அறிக்கைகள் அதிருப்தி அளிக்கிறது. அரசியல்வாதிகள் நீதிமன்றத்தின் புனிதத் தன்மையைக் காக்கும் விதமாக நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட கர்நாடக மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரையில் எவ்விதமான பணி நியமன ஆணைகளும் மேற்கொள்ளப்படாது" என்ற உறுதிமொழியை நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.