அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, 3,500 கிலோ மீட்டர் தூர ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தனது நடைபயணத்தைத் தொடங்கி கேரளா வழியாக கர்நாடகாவை எட்டியுள்ள ராகுல் காந்தி, 37வது நாளான இன்று கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
1976ம் ஆண்டு அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு முதல் முறையாக அலுவல் பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இக்குழு அதன் 11ஆவது அறிக்கையை சமர்ப்பித்தது. 112 பரிந்துரைகளை அந்த அறிக்கை கொண்டிருந்தது.
அந்த பரிந்துரைகளில் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா நவோதயா வித்யாலயா மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட இதர மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் இந்தி.. .அமித்ஷாவின் 112 பரிந்துரைகள்
தவிர்க்க முடியாத இடத்தில் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிக்கலாம். அங்கும் படிப்படியாக ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு இந்தி மொழியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி கட்டாயம். பணியாளர்கள் தேர்வுக்கான வினாத்தாளில் இந்தியில் கேள்வித்தாளை தயாரிக்க வேண்டும் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
அந்தவகையில், ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி எம்.பி இந்த பரிந்துரைகளை கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ளதாவது; “எந்த ஒரு தனிநபருக்கும், மொழி என்பது பேசுவதற்கும் உரையாடுவதற்கும் மட்டுமல்ல, ஒரு மொழி நம்பிக்கையை பிரதிபலிக்க வேண்டும். ஒரு மொழி அதிகளவில் கற்பனை வளத்தையும், வரலாறுகளையும் கொண்டுள்ளது. தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒவ்வொரு மாநிலமும், அந்தந்த மொழியை பயன்படுத்துவதற்கு உரிமை வேண்டும். மாணவர்கள் தங்கள் விரும்பும் மொழியில் அல்லது எந்த மொழியிலும் தேர்வுகளில் விடை எழுத அனுமதிக்கப்பட வேண்டும். தாய்மொழியில் பேசுவதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க இதை தடுக்க நினைக்கிறது. ஆனால் நாங்கள் அதை நடக்க விட மாட்டோம். இந்தியாவை பிளவுபடுத்துவதை விட்டுவிட்டு கடந்த 45 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் ஏன் அதிகமாக உள்ளது என்பதை பா.ஜ.க விளக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.