மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது வேட்புமனுவில் அவரின் கல்விதகுதி, குடியுரிமை குறித்த தகவல்களை தவறாக கொடுத்துள்ளார் என அமேதி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டினார். இதனை காரணமாக கொண்டு ராகுலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்.
இதன் காரணமாக கடந்த வாரம் நடக்க வேண்டிய வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல் உள்ளிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களையும் இன்று சரிபார்த்த தேர்தல் அதிகாரி ராகுல் காந்தியின் வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.