இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு, ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டன் தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடி வந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், அந்த சீசனுடன் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு கடந்த 28 ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன்னை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியிலிருந்து விலகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது” என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த 9 நாள் முழுதாக முடியாத நிலையில் அம்பத்தி ராயுடு கட்சியிலிருந்து விலகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.