சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு கட்டாய விடுப்பு அளித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து இணை இயக்குநரான எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். சிபிஐ இயக்குநருக்கான பணிகளில் இருந்து தன்னை விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிராக அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி மேற்கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. அதன்படி அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்கிய மத்திய அரசின் ஆணை செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.