
கர்நாடகாவில் அண்மையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மை இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக பேசியிருந்தார். இந்நிலையில் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அண்மையில் பதவி விலகிய நிலையில் பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காவிரியில் மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.