தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் என 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று (19-10-23) தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில், பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா காந்தி, “தெலுங்கானா மக்களின் கனவு சமூக நீதி கிடைக்கும் என்பது தான். ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ்வின் அமைச்சரைவையில் 3 அமைச்சர்கள் அவருடைய குடும்ப உறுப்பினர்களாக தான் இருக்கின்றனர். தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களின் எண்ணிக்கை அமைச்சகத்தில் வெறும் 3 சதவீதம் மட்டுமே. இது தான் யதார்த்தம். சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசும்போது மெளனம் காக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், எப்படி சமூக நீதியை வழங்குவார்கள்? என்று கூறினார்.
இந்த நிலையில், சந்திரசேகர ராவ்வின் மகளும், சட்டமேலவை உறுப்பினருமான கவிதா, நேற்று (19-10-23) அர்மூர் என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது பிரியங்கா காந்தியின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “மோதிலால் நேருவின் எள்ளு பேத்தியும், ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேத்தியும், இந்திரா காந்தியின் பேத்தியும், ராஜீவ் காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி குடும்ப அரசியலைப் பற்றி பேசுகிறார்.
இதுவரையிலான தேர்தல் பிரச்சாரத்தில் நான் கேள்விப்பட்ட வேடிக்கையான விஷயம் இது தான். தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கேட்ட எந்த கேள்விக்கும் பிரியங்கா காந்தி பதில் சொல்லவில்லை. அதனால், குடும்ப அரசியலைப் பற்றி பிரியங்கா காந்தி பேசுவதற்கு எந்தவித உரிமையும் இல்லை. அவர் தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்” என்று கூறினார்.