ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை, கடந்த 2018ஆம் ஆண்டே விற்க மத்திய அரசு முயற்சி செய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வங்கியதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம், அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்பொழுது டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக என்.சந்திரசேகரனை நியமித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் ஏற்கனவே 'டாடா சன்' என்ற டாடா குழுமத்தின் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். விரைவில் இதேபோல் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட்டு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஏர் இந்தியாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவை நஷ்டத்திலிருந்து மீட்டுக்கொண்டுவர பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் உரிய தீர்வு கிடைக்காததால் நஷ்டத்தின் ஒரு பகுதியை மத்திய அரசு தானே கையாண்டு ஏர் இந்தியாவின் சொத்துக்களான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை விற்று சரி கட்ட முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும், மேலும் ஒரு பகுதிக்கு தானே (ஏர் இந்தியா) பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், மற்றொரு பகுதிக்கு டாடா குழுமம் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை குறைந்த விலைக்கு டாடா நிறுவனம் வாங்கியிருந்தாலும், ஏர் இந்தியாவின் கடனில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் என்.சந்திரசேகரன் எனும் ஒரு தமிழர் கையில் சிக்கியுள்ள ஏர் இந்தியா மீளுமா என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.