தேர்தல் முடிவுகள் வெளிவந்தால் தோல்வி அடைந்த கட்சிகள் அதிர்ச்சி அடைவதும், வெற்றி பெற்ற கட்சி மகிழ்ச்சி அடைவதும் வாடிக்கையான நிகழ்வு. ஆனால் கடந்த 24ம் தேதி வெளிவந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா தேர்தல் முடிவுகளால் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இரண்டு கட்சிகளும் அதிர்ச்சி அடைந்தன என்றால் அதில் ஆச்சரியமில்லை. அதற்கு காரணம் தேர்தலுக்கு முன்னர் வந்த கருத்துக்கணிப்புகளும், தேர்தல் முடிந்த பிறகு வந்த கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு சார்பாக வந்ததே. அந்த வகையில் மராட்டியம், ஹரியாணாவில் அதிகப்படியான தொகுதிகளில் பாஜக வெற்றிபெரும் என்றும், குறிப்பாக மராட்டியத்தில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜக தரப்புக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக படுதோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்-என்.சி.பி கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்றது. 105 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்றால் சிவசேனாவிடம் சரணடைய வேண்டிய நிலை தற்போது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பதவியை ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் சிவசேனாவின் முதல் கோரிக்கை. அதுவும் முதல் பாதியை சிவசேனாவிற்கு விட்டுத்தர வேண்டும் என்பது அதன் தலைவர் உத்தேவ் தாக்கரேவின் விருப்பம். அவ்வாறு சூழ்நிலைகள் அமைந்தால் தனது மகனை முதல்வர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கலாம் என்பது அவரது எண்ணம். இதனை தேர்தல் முடிவுக்கு பிறகான இந்த இடைப்பட்ட நாட்களில் பாஜக தரப்புக்கு சிவசேனா தகவல் கொடுத்திருந்தாலும், பாஜக முதல்வர் பதவியை விட்டுத்தர சம்மதிக்கவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த சிவசேனா, பாஜகவுக்கு நெருக்கடி தரும் விதத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர் விட்டு பேச செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகளை அடக்க உபயோகிக்கும் சிபிஐ, வருமானவரித்துறையை பயன்படுத்தி சிவசேனாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உடைக்க முயல்வதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அடுத்த மராட்டிய முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவர் தான் என்று இன்று காலையில் கூட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். அனைத்து மாநிலங்களையும் தன் விரல் அசைவில் கட்டுப்படுத்தும் அமித்ஷா இந்த விஷயத்தில் அமைதி காப்பதன் மர்மம்தான் என்னவோ? என்று அவர்கள் கட்சியினரே கடந்த சில நாட்களாக பேசி வந்தார்கள். இந்நிலையில், வரும் 7ம் தேதிக்குள் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதால், அதன்பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக தரப்பு நினைப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு அமல்படுத்தப்பட்டால் அடுத்த ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தினால் மோதுமானது. அந்த வகையில் மத்திய அரசு வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மராட்டியத்திற்கு வழங்குவதன் மூலம் அடுத்து வரும் தேர்தலில் 145 என்ற மாயாஜால எண்ணை பிடிக்கலாம் என்று பாஜக நினைப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் காங்கிரஸ், என்சிபி கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.