நாடு முழுவதும் சிறுமிகளின் மீதான வன்புணர்வுக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கத்துவா கூட்டு வன்புணர்வு, உன்னாவ் வன்புணர்வு, சூரத் சிறுமி படுகொலை என ஒவ்வொரு சம்பவங்களும் பொது சமூகத்தில் நம்பிக்கையற்ற தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கு சூழலில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ளது ஈடாக் கிராமம். இந்த கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்காக 8 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தாள். நேற்று மதியம் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இருந்த அதிகப்படியான இரைச்சலைப் பயன்படுத்திய சோனு எனும் 18 வயது சிறுவன், சிறுமியை அருகில் உள்ள கட்டிடத்திற்கு இழுத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளான்.
மேலும், சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொலைசெய்த அந்த சிறுவன், உயிரிழந்த சிறுமியின் சடலத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கியுள்ளான். சிறுமியைக் காணாமல் தேடிக்கொண்டிருந்த குடும்பத்தினர், இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவன் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது அந்த சிறுவனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.