மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஊழல் குறித்து மோடியால் என்னிடம் 15 நிமிடங்கள் விவாதம் நடத்த முடியுமா? நான் அவருக்கு சவால் விடுகிறேன், முடிந்தால் என்னுடன் விவாதத்தில் அவர் பங்கேற்கட்டும். ஆனால் நான் அடித்து கூறுகிறேன், அதன் பிறகு அவரால் பொதுமக்கள் முன் தனது முகத்தை காட்டவே முடியாது" என கூறினார்.