பால்கோட் தாக்குதலுக்கு மேகமூட்டம் இருப்பது உதவியாக இருக்கும் என தான் கூறியதாக பிரதமர் மோடி கூறியது இணையத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்றுமொரு புதிய விஷயம் பிரதமர் மோடியை பற்றி இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நியூஸ் நேஷன் என்ற செய்தி சேனலுக்கு பேட்டியளித்த மோடி, "1987-88 காலகட்டத்தில் நான் முதல் முறையாக டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் மிக சிலரே மின்னஞ்சலை பயன்படுத்தினர். அப்போது ஒருமுறை அத்வானி பேரணி ஒன்று நடைபெற்றது. அந்த நேரத்தில் நான் பெரிய டிஜிட்டல் கேமரா ஒன்றை பயன்படுத்தினேன். அதை வைத்து நான் அத்வானியை புகைப்படம் எடுத்து டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு அவரது வண்ண புகைப்படத்தை அச்சிட்டு அவரிடம் காட்டினோம். ஒரே நாளில் எனது வண்ணப் புகைப்படத்தை எப்படி உருவாக்கினீர்கள் என ஆச்சரியமடைந்தார்" என்று கூறினார்.
அவர் இப்படி கூறிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் இந்தியாவில் ஈமெயில் சேவை 1995 ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் விஎஸ்என்எல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அதுபோல டிஜிட்டல் கேமராவும் 1988 ல் தான் இந்தியாவில் அறிமுகமானது. எனவே கேமரா அறிமுகம் செய்யப்பட்ட அப்போதே மோடி கையில் கேமரா இருந்ததாகவும், ஈமெயில் அறிமுகத்திற்கு முன்பே அவர் எப்படி ஈமெயில் உபயோகித்தார் எனவும் இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர். இதே விஷயத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் எழுப்பியுள்ளனர்.