ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த 29 ஆம் தேதி சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளது. இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுடன் கிராப் வடிவிலான படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.