ஆசியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக இருந்த கவுதம் அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளில் இருக்கும் வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடிகள் குறித்து ஆதாரங்களுடன் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அதானி குழுமத்தால் சரியான பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து அதானியின் பங்குகள் சரிவை சந்தித்தது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் இன்று (22/2/2023) கணிசமான வீழ்ச்சியுடன் வர்த்தகமானது. இன்று காலை 10 மணிக்கு பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 530 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 141 புள்ளிகளில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 162 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,664 புள்ளிகளில் வர்த்தகமானது. உள்நாட்டில் பணவீக்கம் உயர்வு, சர்வதேசப் பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்கள் பங்குச் சந்தைகள் சரிவில் காணப்பட்டது. சர்ச்சையில் மாட்டிய அதானி குழுமம் இன்றும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின.