விமானநிலையங்களை நிர்வகிப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடப்படும் சூழலில், இத்திட்டத்தின்படி, லக்னோ விமானநிலையத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் லக்னோ விமான நிலையம் அதானி குழுமத்திடம் 50 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு ஒப்படைக்கப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) அறிவித்துள்ளது. ஏற்கனவே அக்டோபர் 30 நள்ளிரவு முதல் மங்களூரு விமான நிலையமும் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், மற்றும் குவஹாத்தி ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை மத்திய அரசு 2019 பிப்ரவரியில் தனியார்மயமாக்கியது.
மத்திய அரசின் இந்த திட்டத்தின்படி விமானநிலையங்களின் நிர்வாகப்பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபின், விமானநிலையங்களைக் கைப்பற்றத் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோர அறிவிக்கப்பட்டது. இதில், அதானி குழுமம் இந்த ஆறு விமானநிலையங்களுக்குமான நிர்வாகப்பணிகளை மேற்கொள்வதற்கான 50 ஆண்டு கால உரிமையை வென்றுள்ளது.