இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை (NTA - என்.டி.ஏ.) சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “நேர இழப்பை ஈடுகட்டக் கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) பெற்ற 1,563 பேரின் முடிவுகளை மதிப்பாய்வு செய்யக் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அட்டைகளை ரத்து செய்ய குழு முடிவு எடுத்துள்ளது. 1,563 மாணவர்களுக்கான மறுதேர்வு குறித்த விவரம் இன்றே அறிவிக்கப்படும். அந்த தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்படும். இதற்கான முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும். ஜூலையில் கவுன்சிலிங் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, “நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் “நீட் கவுன்சிலிங் தொடரும். நாங்கள் அதை நிறுத்த மாட்டோம். தேர்வு முடிந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதனால் பயப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் எழுதினார். அதில்13 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 13 மொழிகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்காக சுமார் 4,500 மையங்கள் உள்ளன. இந்த முறை தேர்வு நடைபெற்றபோது 4500 மையங்களில் 6 மையங்களுக்குத் தவறான வினாத்தாள்கள் அனுப்பப்பட்டிருந்தன. இருப்பினும் சரியான வினாத்தாள் பின்னர் வழங்கப்பட்டது. அதனால் இதற்குச் சிறிது நேரம் பிடித்தது. இந்த மையங்களில் சுமார் 1,563 மாணவர்கள் தேர்வு எழுதியதால் நேர இழப்பைச் சந்திக்க நேரிட்டது. மறுதேர்வுக்குப் பதிலாகக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
தேசிய தேர்வு முகமை ஒரு நிபுணர் குழுவை அமைத்து கருணை மதிப்பெண் விதியைப் பயன்படுத்தியது. சில மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றிருப்பது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து சிலர் கோர்ட்டுக்கு சென்றனர். 1,563 மாணவர்கள் நீட் தேர்வில் மீண்டும் கலந்து கொள்ளவோ அல்லது அசல் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளவோ வாய்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறேன். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டது. எனவே 1,563 மாணவர்கள் நீட் தேர்வில் மீண்டும் கலந்துகொள்ளலாம். தேசிய தேர்வு முகமையால் நீட் (NEET), ஜேஇஇ (JEE) மற்றும் சியூஇடி (CUET) தேர்வுகளுக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.