மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 9ஆம் தேதி (09.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க ஆளும் அரசான மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், பாலியல் குற்றங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரைவைக் கூட்டத்தில் இன்று (03-09-24), சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமை ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் விதமாகவும், பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வகையிலும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவின் பேரில் விவாதங்கள் நடந்த பின்பு, இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தயாரானதில் இருந்து 21 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று இந்த சட்ட மசோதாவில் கூறப்படுகிறது. இதில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சித்திரவதை செய்யப்பட்ட பெண்களுக்கு, நீதிமன்றத்தில் நீதி கிடைத்து வருகிறது. பாலியல் வன்கொடுமை என்பது இப்போது தேசிய அவமானமாக இருக்கிறது. பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான சமூகச் சீர்திருத்தத்திற்காக ஒன்றுபடுவோம். பாலியல் குற்றங்களுக்கு எதிரான இந்த மசோதா விரைவான விசாரணை, விரைவான நீதி வழங்கல் மற்றும் மேம்பட்ட தண்டனை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் பெண்களை பாதுகாக்க பிரதமரும் உள்துறை அமைச்சரும் தவறிவிட்டனர். அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பேசினார்.