அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்றும் (18.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார்.
இதனிடையே பெங்களூர் சவுதாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்துவிட்டார். மோடி பதவியேற்ற பின் இந்த 9 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. மக்கள் இதே மாதிரி மோசமான சூழ்நிலையில் தொடர்ந்து வாழ முடியாது. பா.ஜ.க.வின் மதவாத அரசியலால் மக்கள் ஆதங்கத்துடன் இருக்கிறார்கள்.
கடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி 28 இடங்களில் பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலுமே காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. அதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியை மக்கள் கண்டிப்பாக தோற்கடிப்பார்கள்” என்று கூறினார்.