யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் 41 ஆயிரம் பேரின் கணக்குகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் ரூ. 820 கோடி பரிவர்த்தனை நடைபெற்றன. இதேபோன்று பிற வங்கிகளில் இருந்தும் 14 ஆயிரம் கணக்குகளிலும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இது குறித்து யூகோ வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதம் யூகோ வங்கியைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தனிநபர் தொடர்பான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக இரண்டாவது நாளாக ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் 67 இடங்களில் இன்று (07.03.2024) சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.
மத்திய ஆயுத படையினர், காவலர்கள், சிபிஐ அதிகாரிகள் கொண்ட 40 குழுவினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் யூகோ, ஐடிஎப்சி ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இரு ஹார்டு டிஸ்க், 40 செல்போன்கள், 43 டிஜிட்டல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.