உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போராட்டக்காரர்கள் குறித்து அம்மாநில சட்டசபையில் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களில் சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச அரசின் இந்த அடக்குமுறை பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சியினரும் உ.பி அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று உத்தரப்பிரதேச சட்டசபையில் பேசிய யோகி ஆதித்யநாத், "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் யாரையும் சுடவில்லை. போராட்டக்காரர்கள் அவர்களே ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டனர். மக்களை சுடும் எண்ணத்துடன் ஒருவர் வீதிக்கு சென்றால், ஒன்று அவரோ அல்லது காவல்துறையை சேர்ந்தவர்களோ உயிரிழக்கின்றனர். ஜனநாயக ரீதியிலான எந்த போராட்டத்தையும் நாங்கள் ஆதரிப்போம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால், ஜனநாயகத்தின் பின்னே ஒளிந்துகொண்டு வன்முறையை தூண்டினால், அவர்களது வழியிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கங்களோடு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. சுதந்திரம் என்றால் என்ன? நாம் ஜின்னாவின் கனவை நனவாக்குவதற்காக உழைக்க வேண்டுமா அல்லது காந்தியின் கனவை நோக்கி செல்ல வேண்டுமா?" என தெரிவித்தார். போராட்டங்கள் மீதான அடக்குமுறை குறித்த அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.