மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி, ஆட்சியில் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்த கூட்டணி உடைந்தது. இதனையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சியில் அமர்ந்தது. இதன்பிறகு பாஜகவும், சிவசேனாவும் கடுமையாக மோதி வருகின்றன.
இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, சார்தார் வல்லபாய் படேல் மைதானத்தின் பெயரை மாற்றியதை விமர்சித்துள்ளார். மேலும் மத்திய அரசு சீனாவை கண்டு ஓடுகிறார்கள் எனவும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து உத்தவ் தாக்ரே, "மைதானத்தின் (மோட்டேரா) பெயர் நரேந்திர மோடி மைதானமாக மாற்றப்பட்டதால், நாம் எந்த கிரிக்கெட் போட்டியிலும் தோற்க மாட்டோம். சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரை நாங்கள் சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டியுள்ளோம். ஆனால் அவர்கள் சர்தார் படேல் மைதானத்தின் பெயரை மாற்றியுள்ளனர். நாங்கள் உங்களிடமிருந்து இந்துத்துவாவைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
விவசாயிகள் அங்கு (டெல்லி) சிக்கலில் உள்ளனர். அவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதோடு, அவர்களின் பாதையில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சீனாவைப் பார்க்கும்போது அவர்கள் ஓடிவிடுகிறார்கள். சீனா அல்லது பங்களாதேஷுடனான எல்லைகளில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் ஊடுருவல் நடக்காது.
(சிவ) சேனா சுதந்திர போராட்டத்தின் அங்கமாக இல்லை. ஆனால் உங்கள் தாய் அமைப்பும் (ஆர்.எஸ்.எஸ்) சுதந்திர போராட்டத்தில் அங்கம் வகிக்கவில்லை. 'பாரத் மாதா கி ஜே என்று கோஷமிடுவது உங்களை (பிஜேபி) ஒரு தேசபக்தராக ஆக்காது" என கூறியுள்ளார்.