உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் வகை கரோனா, இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் சுமார் 40 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று (14.12.2021) மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வசை-விரர் பகுதியைச் சேர்ந்தவர். பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் ஒரே அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 3ஆம் தேதி லண்டனிலிருந்து மும்பை திரும்பிய நபர், தனது அலுவலகத்திற்குச் சென்று சகப் பணியாளர்களைச் சந்தித்ததாகவும், அவரிடமிருந்து மற்றவர்களுக்கும் ஒமிக்ரான் வகை கரோனா பரவியிருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டனிலிருந்து திரும்பிய நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களைத் தேடும் பணியும் நடைபெற்றுவருகிறது.