விமானத்தின் எஞ்சின் பகுதியில் மூடப்பட்டிருந்த மூடி கழன்று விழுந்த நிலையில் விமானம் ஒன்று ஒருமணி நேரம் பயணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் புஹூஜ் நகருக்கு 70 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான "அலையன்ஸ் ஏர்" விமானம் ஒன்று நேற்று சென்றது. விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட நிலையில் விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் இருந்து ஏதோ ஒரு பொருள் விழுவதை போன்று சத்தம் வந்துள்ளதாக விமானிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் விமானம் நல்ல முறையில் இயங்குவதாகவும் அதற்கான வாய்ப்பு குறைவு என்று கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒருமணி நேர பயணத்தக்கு பிறகு விமானம் புஹூஜ் நகருக்கு பத்திரமாக சென்றடைந்தது. அங்கிருந்த ஊழியர்கள் விமானத்தை எப்போதும் போல சோதனை செய்ததில் விமானத்தின் எஞ்சின் பகுதியில் இருந்த மூடி கீழே விழுந்துள்ளதை கண்டுப்பிடித்துள்ளனர். விமானம் புறப்பட்டபோது காற்றில் எஞ்சின் மூடி கழன்று விழுந்துள்ளதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து கழகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. விமானம் புறப்படும் போது ஆய்வு செய்த அதிகாரிகள் இதனை எப்படி கவனிக்க தவறினார்கள் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அந்த தனியார் விமான நிறுவனமும் உத்தரவிட்டுள்ளது.