மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல், தங்களது நிலத்தை பலவந்தமாக கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த பகுதியில் வாழும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ஷேக் ஷாஜகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஊழல் செய்ததாக ஷேக் ஷாஜகான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தச் சென்றனர். அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகளை ஒர் மர்ம கும்பல் தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஷேக் ஷாஜகான் தலைமறைவாகி உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநில சட்டசபை இன்று (12-02-24) கூடியது. இதையடுத்து, சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, ஷாஜகானை கைது செய்ய் வேண்டும் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சோபந்தேப் சட்டர்ஜி, அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர முன்மொழிந்தார். இதற்கு அனுமதி அளித்த சபாநாயகர் பிமன் பானர்ஜி, அமளியில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 6 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.