இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்துவருகிறது. அதேநேரத்தில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் (ஐ.சி.எம்.ஆர்), மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் ஏற்படுமென்றும், இந்த மூன்றாவது அலையில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகும் எனவும் கூறியுள்ளது.
இதற்கிடையே, கரோனா எதிர்ப்பு சக்தி மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு இருக்கிறது என்பதைக் கண்டறியும் செரோ ஆய்வையும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் நடத்திவருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில், 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 70 மாவட்டங்களில் நான்காம் கட்ட செரோ ஆய்வு முடிவுகள் நேற்று (20.07.2021) வெளியிடப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும்போது பேசிய ஐ.சி.எம்.ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா, "28,975 பொதுமக்களும், 7,252 சுகாதாரப் பணியாளர்களும் இந்த செரோ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 6 வயதிற்கு மேற்பட்ட இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு சதவீதம் பேர் அதாவது 67.6 பேர் கரோனாவிற்கெதிரான நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர். அதேநேரம் மூன்றில் ஒரு சதவீதம் பேர் அதாவது 40 சதவீதம் கரோனா எதிர்ப்பு திறனை பெறாமல், கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரப் பணியாளர்களில் 85 சதவீதம் பேர் கரோனாவிற்கெதிரான நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர் எனக் கூறிய டாக்டர் பால்ராம் பார்கவா, "செரோ சர்வேயின் முடிவுகள் நம்பிக்கையை விதைக்கிறது. ஆனால் மனநிறைவுக்கு இடமில்லை. கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.