பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே ஆனந்த் விஹார் என்ற இடத்தில் இருந்து காமக்யா நோக்கிச் செல்லும் ரயில் (வண்டி எண் : 12506) தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் நேற்று (11.10.2023) இரவு 09.35 மணியளவில் தடம் புரண்டதாக நேற்று தகவல் வந்திருந்தது.
ஆனால், 21 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி பெரும் விபத்து ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் இன்று வெளியாகியுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவக் குழுவினரும், மீட்புக் குழுவினரும் விரைந்தனர். அங்கு சென்ற அவர்கள், விபத்துக்குள்ளான மக்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் தொடக்கத்தில் ஒரு பயணி மட்டும் உயிரிழந்து விட்டதாகவும், மற்ற பயணிகள் பலத்த காயம் அடைந்ததாகவும் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இதுவரை 4 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகாரில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் மனம் உடைந்து வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.