இந்தியாவில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் தாங்களே கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில், மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
25.60 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்திய அரசு மூலமாகவும், நேரடி மாநில கொள்முதல் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன. இதில், வீணான தடுப்பூசிகள் உட்பட மொத்தமாக 24,44,06,096 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 1.17 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் மாநிலங்களிடம் இருப்பில் உள்ளன என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அடுத்த மூன்று நாட்களில் 38 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.