ஜம்மு மாநிலம் கத்துவா, உன்னாவ், சூரத் என நாடு முழுவதிலும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வந்தன. அந்த நிலையில்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் விதமாக, போக்ஸோ சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதிகபட்சமாக தூக்குத்தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட்ட நிலையிலும், மைனர் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
அதன்படி, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பணிபுரியும் நிலத்தின் உரிமையாளர், சிறுமியை உடன் அழைத்துச் சென்றிருந்த நிலையில், இரவு முழுவதும் சிறுமிக்கு வயிற்று வலி அதிகம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால், குற்றவாளி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். குற்றவாளியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். அதேசமயம், சிறுமியின் நிலைமை மோசமாகிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தவறு செய்பவர்கள் சட்டத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. இந்தக் குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான துரித செயல்பாடுகளில் இறங்கவேண்டிய இந்த சூழலில், சட்டம் தோற்றுவிட்டதா என்ற கேள்வி எழுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.