மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், விடுதியின் உரிமையாளர் பா.ஜ.க பிரமுகர் சப்யாசி கோஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, பா.ஜ.க பிரமுகர் சப்யாசி கோஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘விடுதியில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதான் பா.ஜ.க., பெண்களை அவர்கள் பாதுகாப்பதில்லை. பாலியல் தொழில் செய்பவர்களைத் தான் பாதுகாக்கிறார்கள்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக், பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனையடுத்து, மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்த மஜூம்தார் உட்பட பா.ஜ.க.வினர், மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்தும், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.