ஜிஎஸ்டி செலுத்தாத 22 லட்சம் நிறுவனங்கள்
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரிடமும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு ரூ.94,000 கோடி வரை வரி வசூல் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, ஏறக்குறைய 22 லட்சம் நிறுவனங்கள் இதுவரை ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தவில்லை. இவர்கள் குறைந்தபட்சமாக 1 முதல் 30,000 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கிட்டதட்ட 70 சதவீதம் அல்லது 32 லட்சம் தொழில்கள் இதுவரை வரி ஏதும் செலுத்தவில்லை. தற்போது வரை சுமார் ஒரு கோடி தொழில்கள் மற்றும் சேவை அமைப்புக்கள் ஜிஎஸ்டிஎன்.,ன் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளன என தெரிய வந்துள்ளது.
நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை வருமானம் பெறுவோரிடம் இருந்து 94 முதல் 95 சதவீதம் வரி வசூலாகி இருப்பதாகவும், வரி வசூல் அதிகரிக்கும் போது வரி விகிதம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் 54 லட்சம் தொழில்கள் இதுவரை எந்த வரி விலக்கும் பெறாமல், வரி செலுத்தாமலும் இருந்து வருவதாக அரசு புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது.