கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மதம், மத்திய அரசு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசமாகவும் மாற்றியது. இதன்பிறகு அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி, பாகிஸ்தான் வான்வெளி வழியாக அமெரிக்கா செல்வதற்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாகிஸ்தான் வான்வெளி வழியாக ஐஸ்லாந்து செல்வதற்கும் பாகிஸ்தான் அனுமதி மறுத்தது.
இதன்பிறகு அதே 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில், பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்வதற்குப் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ளவும் அந்த நாடு அனுமதி வழங்கவில்லை. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தங்கள் நாட்டு வான்வெளியை இந்திய பிரதமர் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கவில்லை எனவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் பயணத்திற்கு இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாகவும், இந்திய அரசும் இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.