மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (01/02/2021) தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29- ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று (01/02/2021) காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (01/02/2021) காலை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுவதன் மூலம் அரசுக்கு ரூபாய் 140 கோடி மிச்சமாகும் என்று தகவல் கூறுகின்றன. நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி 'ஸ்மார்ட் பட்ஜெட்' தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை. பட்ஜெட் உரை முடிந்த பின் 'Union Budget' என்ற செயலி மூலம் தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8 ஆவது பட்ஜெட் இதுவாகும். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 ஆவது முறையாக முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனாவால் சரிந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.