உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் இந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை, தங்களது பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி தலைமையில் சந்திக்கவுள்ளது. அவரும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச தேர்தலையொட்டி பிரியங்கா காந்தி, பல அதிரடி வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அண்மையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 12ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோனும், பட்டதாரி பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டியும் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்தநிலையில் பிரியங்கா காந்தி, தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் "பிரதிக்யா யாத்திரை"யை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மேலும் சில அதிரடி வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
பிரதிக்யா யாத்திரையை தொடங்கி வைக்கும்போது பேசிய அவர், "இலவச மின்சார ஸ்கூட்டி, பள்ளி மாணவிகளுக்கு மொபைல் போன்கள், விவசாய கடன் தள்ளுபடி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்குவது, அனைவருக்கும் மின்கட்டணத்தை பாதியாக குறைப்பது, கரோனா காலகட்டத்தை சேர்ந்த நிலுவை மின்தொகையை ரத்து செய்வது ஆகியவை நமது தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒரு குவிண்டால் அரிசிக்கும், கோதுமைக்கும் 2500 ரூபாய் குறைந்த பட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்படும். கரும்புக்கு குவிண்டாலுக்கு 400 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும் எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.