Skip to main content

ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

Published on 25/07/2018 | Edited on 25/07/2018


கடந்த 2015-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் பட்டேல் இடஒதுக்கீடு போராட்டத்தின் போது, எம்.எல்.ஏ அலுவலகத்தை சூறையாடியதாக தொடரப்பட்ட வழக்கில், ஹர்திக் படேல் உள்ளிட்ட மூவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். இந்தப் போராட்டத்தின் போது, மேஹ்சனா மாவட்டத்தின் விஸ்நகரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹர்திக் பட்டேல், அவரது ஆதரவாளர்கள் லால்ஜி பட்டேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு விஸ்நகரில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

 

 

இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட இரண்டு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், மீதம் உள்ளவர்கள் மீது போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி வி.பி.அகர்வால் தீர்ப்பு கூறினார்.

ஹர்திக் பட்டேல், லால்ஜி பட்டேல் மற்றும் சர்தார் பட்டேல் அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை காலம் விதிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பட்டேலால் ஜாமீன் பெற முடியும் என்பதால் அவரின் வழக்கறிஞர் ஜாமீன் மனுவை உடனடியாக தாக்கல் செய்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு மாதத்தில் தேர்தல்; காங்கிரஸ் பிரமுகரை தட்டித்தூக்கிய பாஜக

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

Hardik Patel joins BJP ahead of Gujarat Assembly polls

 

படேல் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக கடந்த 2015ஆம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் ஹர்திக் படேல். 29 வயதேயான இவர், 2020ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அகில இந்திய தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து, காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல், இன்று பாஜகவில் இணைந்தார்.

 

குஜராத்தில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் இணைந்த ஹர்திக் படேல், ”உலகத்தின் பெருமையாக பிரதமர் மோடி இருக்கிறார். நான் சிறு சிப்பாயாக எனது வேலையை செய்யவிருக்கிறேன்” எனத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸில் உள்ள எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகளை பாஜகவில் இணையவைக்க 10 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

 

இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் படேலின் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்குமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

Next Story

பாஜகவில் இணைய நாள் குறித்த ஹர்திக் பட்டேல்!

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

lkj

 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் பாஜகவில் இணைய உள்ளார் ஹர்திக் பட்டேல்.

 

கடந்த 2015ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஹர்திக் பட்டேல். அதிகப்படியான மக்கள் செல்வாக்கால் அரசியல் கட்சியினரை ஆச்சரியப்படுத்தி அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்தார். இதற்கிடையே திடீர் திருப்பமாகக் கடந்த 18ம் தேதி அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். தன்னை குஜராத் காங்கிரஸ் கமிட்டி ஒதுக்குவதாகக் குற்றம் சாட்டிய அவர் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

 

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நாளை மறுநாள் தான் பாஜகவில் இணைய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரின் வருகை மாநில பாஜகவுக்கு மேலும் வலிமை தருவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் பாஜகவில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றால் துணை முதல்வர் பதவி கேட்போம் என்று அவரின் ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறியுள்ளார். ஆனால் பதவி தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை என்று ஹர்திக் பட்டேல் மறுத்துள்ளார்.