ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவியின் பெயர் ஷாலு தேவி. 32 வயதான ஷாலு தேவி கடந்த 5ம் தேதி தனது அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஷாலு தேவியும் அவரது அண்ணனும் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் விபத்து என்று வழக்கை முடித்து வைத்தனர். தனது மனைவியின் சடலத்தின் முன் அமர்ந்து அழுத மகேஷ் சிறிது நேரத்திலேயே அவரது மனைவியின் பெயரில் போடப்பட்ட இன்சூரன்ஸ் பணத்தை வாங்குவதற்குச் சென்றுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விசாரணை செய்துள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டில் உள்ள சிசிடிவியில் சோதனை செய்தபோது விபத்து நடந்த நாளன்று ஷாலு தேவியும் அவரது அண்ணனும் கோவிலுக்குச் சென்ற பின் வீட்டிலிருந்து வெளியில் வந்த மகேஷ் அங்கு நின்றிருந்த காரின் உள்ளே இருந்தவர்களிடம் பேசியுள்ளார். இதன் பின் அந்தக் கார் அங்கிருந்து சென்றுள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான காரும் அங்கிருந்து சென்ற காரும் ஒன்றுதான் என்பதால் காவல்துறையினர் மகேஷிடம் மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணையில் மகேஷ் மற்றும் ஷாலு தேவி கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். திருமணத்தின்போது போதுமான வரதட்சணை தராததால் அடிக்கடி தம்பதிகள் இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மனைவியைக் கொலை செய்ய எண்ணிய மகேஷ் அதனைப் பணமாக்க முயன்றுள்ளார்.
தொடர்ந்து மனைவியின் பெயரில் 2 கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்து ஒரு வருடம் காத்திருந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரையும் கொலை செய்த கூலிப்படை நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.