கேரளா மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் பாபு. இவர் கண்ணூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது சொந்த ஊரான பத்தினம்திட்டா மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையொட்டி, கண்ணூர் மாவட்டத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பிரிவு உபச்சார விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த விழாவில் கலந்து கொண்ட பின் நவீன் பாபு, தனது அலுவலக குடியிருப்புக்குச் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், நவீன் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், கூடுதல் ஆட்சியர் நவீன் பாபுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழாவில், அழைப்பு இல்லாமலேயே கண்ணூர் மாவட்ட ஊராட்சி தலைவர் திவ்யா கலந்து கொண்டுள்ளார். அப்போது பலர் முன்னிலையில் பேசிய திவ்யா, நவீன் பாபு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியுள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான நவீன் பாபு, அலுவலக குடியிருப்புக்கு சென்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், கூடுதல் ஆட்சியர் ஒருவர் தற்கொலை செய்து இறந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.