இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலக்போப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் "தேசத்தின் மல்யுத்த சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்டதை கண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். கஷ்டப்பட்டு வாங்கிய பதக்கங்களை வீரர், வீராங்கனைகள் கங்கை நதியில் வீச நினைப்பது வருத்தமளிக்கிறது. பல ஆண்டு உழைப்பு, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதி உள்ளிட்டவற்றின் மூலம் கிடைத்த அந்த பதக்கங்கள் ஒட்டுமொத்த நாடே பெருமைப்படும் விஷயமாகும். எனவே, இந்த விவகாரத்தில் வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வீராங்கனைகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். சட்டம் தன் கடமையை செய்யட்டும்" என தெரிவித்துள்ளனர்.