இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் தற்போது அந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 7 வீராங்கனைகள் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் கொடுத்தார்கள். இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் பதிவு செய்துள்ள புகாரின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகவும் அவர்களது உடல் பாகங்களை அவர்களது அனுமதியின்றி தொட்டதாகவும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. விளையாட்டில் முன்னேற உதவ வேண்டுமானால் தன் விருப்பத்துக்கு இணங்க வேண்டும் என்றும் தன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரிஜ் பூஷன் இரு முறை கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த போட்டிகளுக்கு முன்னதாக லக்னோவில் பயிற்சி போட்டிகள் நடைபெற்றன. பயிற்சி போட்டி முடிந்து குழு புகைப்படம் எடுக்க நின்று கொண்டு இருந்த போது தவறான முறையில் தன் பின்னால் தொட்டதாக ஒரு வீராங்கனை பிரிஜ் பூஷண் மீது குற்றம் சாட்டி உள்ளார். அவர் அநாகரீகமாக நடந்ததால் அவரிடம் இருந்து தான் விலகிச் சென்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த புகைப்பட நிகழ்வின் போது குறிப்பிட்ட வீராங்கனை தர்ம சங்கடமான நிலையில் இருந்ததாகவும், அதன் பின் அந்த வீராங்கனை அங்கிருந்து விலகி முன்வரிசைக்கு சென்றதை தான் பார்த்ததாகவும் சர்வதேச நடுவரான ஜக்பீர் சிங் கூறியுள்ளார். பிரிஜ் பூஷண் சிங் மீதான வழக்குகளில் பட்டியலிட்டுள்ள 125 சாட்சிகளில் ஜக்பீர் சிங்கும் ஒருவர். மல்யுத்த வீராங்கனைகளை 15 முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.