இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மெல்ல குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரும் அளவில் தளர்வுகளை அளிக்கத் தொடங்கிவிட்டன. அதேநேரத்தில் நாட்டில் கரோனா இரண்டாவது அலைக்கு காரணமாக இருந்த டெல்டா வகை கரோனா, டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்துள்ளது.
இந்த டெல்டா ப்ளஸ் வகை கரோனா மூன்றாவது அலையை ஏற்படுத்தலாம் என மஹாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனினும், டெல்டா ப்ளஸ் கரோனா கவலைக்குரிய தொற்றாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. அதேநேரத்தில் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, டெல்டா ப்ளஸ் வைரஸ் கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உட்பட இந்தியா முழுவதும் 20 டெல்டா ப்ளஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சுஜீத் சிங் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், டெல்டா வகை கரோனாவே அதிகம் பரவி வருவதாகவும், அதுவே தற்போது வரை வலுவான மரபணு மாற்றமடைந்த வைரஸாக இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.